அழைப்பாளர்களுக்கு!!!

தஃவா பணியில் ஈடுபடுகின்றவர்கள் மீது மக்களுக்கு ஏற்படும் நல்லெண்ணம் என்பது தஃவாவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த வகையில் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தைப் பெற்ற தாஈகளின் கருத்துக்கள் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. உங்களது தஃவா அதிகூடிய வெற்றியை நல்குவதற்குப் பின்வரும் அடிப்படைகள் பெரிதும் உதவலாம்.
1. இஹ்லாஸ்
நாம் யாரை சத்தியத்தின் பால் அழைக்கின்றோமோ அந்த மக்கள் இவர் அல்லாஹ்வுக்காகத்தான் தஃவத் செய்கின்றார் என்று உறுதியாக நம்ப வேண்டும். இவர் புகழுக்காக அல்லது உலக ஆதாயத்திற்காக தஃவா செய்கின்றார் என நினைத்தால் சொல்லும் கருத்து உண்மையாக இருந்தாலும் அதை ஏற்று செயற்படுத்த முன்வர மாட்டார்கள். சில போது கருத்தை ஏற்றவர்கள் கூட எதிர்க்கக் கூடிய நிலை ஏற்படலாம்.
நபிமார்கள் பலரும் மக்களுக்கு தஃவா செய்யும் போது உங்களிடத்தில் நான் கூலியை எதிர்பார்க்கவில்லை என்பதைத் திரும்பத் திரும்ப கூறியுள்ளதும் இதைத்தான் உணர்த்துகின்றது.
2. அழைக்கப்படுபவனின் நலனில் அக்கறை:
நீங்கள் யாருக்கு தஃவா செய்கின்றீகளோ அவர் விடயத்தில் நீங்கள் அக்கறையுடன் இருப்பதாக அவர் உணர வேண்டும். அவர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் உயர்வடைய வேண்டும் என நீங்கள் விரும்புவதாக அவர் உணர வேண்டும்.
ஒருவரின் தவறை நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள். இதன் மூலம் அவரை இழிவடையச் செய்ய நீங்கள் விரும்புவதாக அவர் உணர்ந்தால் உங்கள் கருத்தை ஏற்க மாட்டார்É எதிர்ப்பார். அத்துடன் உங்களிடம் சுட்டிக் காட்டுவதற்கு என்ன குற்றம் குறைகள் இருக்கின்றன எனத் தேடுவார்.
எனவே, யாருக்கு நீங்கள் தஃவத் செய்கிறீர்களோ அவர்களின் இம்மை, மறுமை முன்னேற்றத்தில் நீங்கள் அக்கறை செலுத்து கின்றீர்கள் என்பதை அவர்கள் உணரும் விதத்தில் நீங்கள் நடந்து கொள்ளுங்கள். அவர்களது உலக விடயத்திலும் ஆர்வம் காட்டுங்கள். இதோ இறைத் தூதர்(ச) அவர்கள் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
நிச்சயமாக உங்களில் இருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு வருத்தத்தையளிக்கின்றது. உங்கள் விடயத்தில் அவர் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார்ளூ நம்பிக்கையாளர்களுடன் கருணையும் இரக்கமுடையவருமாவார்.’ (9:128)
இறைத் தூதர்கள் தங்கள் பிரச்சாரத்தின் மூலம் இந்த உணர்வை வெளிப்படுத்தியிருப் பதைக் காணலாம்.
நிச்சயமாக நாம் நூஹை அவரது சமூகத்தாருக்குத் தூதராக அனுப்பினோம். அவர், ‘எனது சமூகத்தினரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனையன்றி வணங்கப்படத் தகுதியானவன் உங்களுக்கு வேறுயாரும் இல்லை. (நீங்கள் மாறு செய்தால்) நிச்சயமாக நான் மகத்தானதொரு நாளின் வேதனையை உங்கள் மீது அஞ்சுகின்றேன்’ என்று கூறினார்.’
(7:59)
இங்கே நூஹ்(ர) அவர்கள் மகத்தான அந்நாளின் வேதனைக்கு நீங்கள் ஆளாகி விடுவீர்கள் என நான் அஞ்சுகின்றேன் என இரக்கப்படும் தொணியில் பேசி மக்கள் மீதான தனது நேசத்தையும், பாசத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
3. கனிவான அணுகுமுறை:
நாம் யாருக்கு தஃவா செய்கின்றோமோ அவர்களுடன் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அன்பான அரவணைப்பும் கனிவான வார்த்தையும் சில வேளை அவர்கள் உண்மையை உணர உதவலாம். அவர்களது உள்ளக் கதவுகளைத் திறக்கலாம்.
எல்லா நபிமார்களும் சிலை வணங்கக் கூடிய, அல்லாஹ்வை நிராகரிக்கக் கூடிய மக்களை அழைத்துப் பேசும் போது கூட ‘யாகவ்மீ!’ — என் சமுதாயமே! என விழித்தே அழைத்தனர். உங்களுக்கும் எனக்கும் எந்த ஒட்டும் இல்லைÉ உறவும் இல்லை என்ற தோறணையில் நடந்ததே இல்லை.
இவ்வாறே தங்களுடைய உறவு முறையை மறக்காமல் குறிப்பிட்டு அழைத்துள் ளனர். இப்றாஹீம் நபியின் தந்தை பெரும் சிலை வணங்கியாக இருந்தார்கள். இருப்பினும் ‘யா அபதீ’ — எனதருமைத் தந்தையே! என அந்த உறவைக் குறித்து விழித்துப் பேசியுள்ளார்கள்.
எங்களில் சிலர் தமது கொள்கை உறுதியைப் பறைசாட்டுவதற்காக தந்தை, மாமி போன்ற உறவுடைய மாற்றுக் கருத்துடையவர் களையும் அபூஜஹ்ல், பிர்அவ்ன் அவன்ட முகத்தையும் நான் பார்க்கிறதில்லை என்ற தோறணையில் பேசுகின்றனர்.
தவறில் இருக்கின்றவர்கள் மீது காட்டும் கோபம்தான் தமது கொள்கை உறுதிக்கான சான்று எனத் தப்பாக எடை போட்டு வருகின்றனர். சிலர் புதிதாக ஒரு கருத்தைப் புரிந்து கொள்வார்கள். அடுத்த நாளே அந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்தில் இருப்பவர்களுடன் வெறுப்பை வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வார்கள். நேற்றுவரை நானும் இவர்களது நிலைப்பாட்டில்தானே இருந்தேன் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. நான் திருந்திய உடனேயே முழு உலகமும் திருந்திவிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது சாத்தியப்படக் கூடியதல்ல.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போரிடச்) சென்றால் (எதிரியையும் நண்பனையும் பற்றி) தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இவ்வுலக வாழ்வின் பொருட்களை விரும்பி, உங்களிடம் ஸலாம் கூறியவரிடம் நீர் நம்பிக்கை கொண்டவர் அல்லர் என்று கூறாதீர்கள். அல்லாஹ்விடமோ ஏராளமான வெகுமதிகள் உள்ளன. இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே, (நம்பிக்கை கொண்டோர் யார் என்பது பற்றி) தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.’
(4:94)
இதனை எண்ணி மாற்று நிலைப்பாட்டில் இருப்பவர்களுடன் அன்பாகவும், பண்பாகவும், கனிவாகவும், கண்ணியமாகவும் உண்மைகளை எடுத்துச் சொல்ல முயல வேண்டும்.
4. தீர்ப்புக் கூறுவதில் அவசரம் காட்டாதீர்கள்:
சிலர் தஃவா செய்வார்கள். அதை மக்கள் ஏற்காவிட்டால் காபிர், பாவி, பித்அத் காரன், உருப்படமாட்டான், திருந்தாத ஜென்மங்கள், ஜஹன்னவாதி (நரகவாதி) என்றெல்லாம் பேசிவிடுகின்றனர். சில போது தீர்ப்புக் கூறிவிடுகின்றனர். தெளிவுபடுத்து வதில் நான் குறைவிட்டிருக்கலாம் என்று எண்ணுவதில்லை. என்மீது உள்ள நம்பிக்கையீனத்தால் இந்த மக்கள் இந்த உண்மையை உணராமல் இருந்திருக்கலாம் என எண்ணுவதில்லை. ஹிதாயத் அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. அவன் இன்னும் நாடவில்லை என்று சிந்திப்பதுமில்லை. ‘எருமை மாட்டிற்கு மேல் மழை பொழிவது போல’ எவ்வளவு சொன்னாலும் இந்தக் கூட்டத்துக்கு ஏறவே ஏறாது என்று பேசிவிடுகின்றனர். சில போது மறுத்தவர்கள் குறித்துப் பேசும் போது அவனையென்டால் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்று அல்லாஹ்வின் விடயத்தில் கூட தீர்ப்புக் கூறிவிடுகின்றனர். இவை தவறான போக்குகளாகும். இதனால் சில போது நம்மால் திட்டப்பட்டவன் நாம் கூறுவது உண்மை என்றாலும் நம்முடன் இணைந்து பணி செய்ய விரும்பமாட்டான்.
5. பழிவாங்குவது தஃவாவின் இலக்கு அல்ல:
சிலர் மாற்றுக் கருத்துள்ளவர்களைப் பழிவாங்குவதையே தமது தஃவாவின் இலக்காகக் கொள்கின்றனர். எப்படியாவது அவர்களின் குற்றம் குறைகளைத் தேடித் துருவிக் கண்டுபிடித்து அவற்றை ஊதிப் பெருப்பித்து பிரச்சாரம் செய்வதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம். அப்படியே தப்புத் தவறு கிடைக்காவிட்டால் நல்ல செயற்பாடுகளுக்குக் கூட உள்நோக்கம் கற்பித்து அல்லது அவதூறுகளை இட்டுக் கட்டி வஞ்சம் தீர்த்துக் கொள்கின்றனர். உண்மையான தஃவா என்பது பழிதீர்ப்பது, பள்ளத்தில் வீழ்த்திவிடுவது அல்ல. உள்ளத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதே உண்மையான தஃவாவாகும்.
இந்த வகையில் எதிரியின் குறைகளையும் மறைக்க வேண்டும். நல்ல அணுகுமுறை மூலம் எதிரியையும் நண்பனாக மாற்றிக் கொள்ளலாம்.
உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவு வைப்போருக்கு அவர் களிடம் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கின்றது. எனினும் எவன் புறக்கணிக் கின்றானோ நிச்சயமாக அல்லாஹ் (அவனை விட்டும்) தேவையற்றவன்ளூ புகழுக்குரியவன்.’ (60:6)
உங்களுக்கும், அவர்களில் எவர்களை நீங்கள் பகைத்துக் கொண்டீர்களோ அவர்களுக்குமிடையில் அல்லாஹ் அன்பை உண்டு பண்ணுவான். அல்லாஹ் பேராற்றலுடையவன். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’ (60:7)
நாம் யாரை வஞ்சம் தீர்க்க நினைத்து அவர்களது தவறுகளைக் கிளறி பகிரங்கப் படுத்துகின்றோமோ அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு பரிசுத்தமாகி இருந்தால் எமது நிலை என்ன? அல்லாஹ் மன்னித்தவனை மக்கள் மன்றத்தில் மட்டம் தட்ட எமக்கு என்ன உரிமை இருக்கின்றது? எனவே, தஃவா எனும் இந்த உயரிய பணியைப் பழி தீர்ப்பதற்கான ஊடகமாகப் பயன்படுத்தக் கூடாது. இது மக்களை சத்தியத்தை விட்டும் தூரமாக்கு வதுடன் அழைப்பாளன் மீது வெறுப்பையும் ஏற்படுத்தும்.
6. உரிய கண்ணியத்தைக் கொடுங்கள்:
உண்மைக்கு மாற்றமான கருத்தில் இருப்பவர் முதியவராக இருந்தால் அந்த வயதுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். சிறியவராக இருந்தால் அவருக்குரிய அன்பைக் கொடுத்தே தஃவத் செய்ய வேண்டும். நமக்கு முரணான நிலைப்பாட்டில் இருப்பவர் ஆலிமாக இருந்தால் அவரது இல்முக்குரிய கண்ணியத்தை வழங்கியே தஃவத் செய்ய வேண்டும். மாற்று இயக்கத்தில் மதிக்கப்படக் கூடிய தலைவர்களாக இருந்தால் அதற்குரிய சமூக அந்தஸ்த்தை வழங்கியே தஃவத் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் எமது தஃவத் வெற்றி பெறாத அதே வேளை, தேவையில்லாத வம்புகளுக்கும் நாம் ஆளாக நேரிடும்.
நபி(ச) அவர்கள் தாயிபில் இருந்து மக்கா வந்த போது முத்இம் என்ற முஷ;ரிக் அவருக்கு உதவினார். பத்ர் யுத்தம் நடந்த போது அவர் மரணித்துவிட்டார். பத்ர் போரில் காபிர்கள் எழுபது பேர் கைதிகளாகப் பிடிக்கப் பட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் நபி(ச) அவர்கள் முத்இம் இப்போது உயிரோடு இருந்து இவர்கள் விடயமாகப் பேசினால் நான் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்கள்.
முத்இம் முஷ;ரிக்தான். ஆனால் நல்லவர். அவருக்குரிய மரியாதையை அவர் முஷ;ரிக்காக இருந்தாலும் மரணித்த பின்னர் கூட நபி(ச) அவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்பதைத்தான் இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.
இன்று பித்அத்துக்களை முன்நின்று செய்யும் சில உலமாக்கள் கடந்த காலங்களில் சமூகத்திற்கு பல சேவைகளைச் செய்துள்ளார்கள். அவர்களால் இந்த நாட்டில் பல இஸ்லாமிய அம்சங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களது கடந்த கால சேவைகளையெல்லாம் அள்ளிக் குப்பையில் போடுவது போல் பேசுவதென்பது எந்த வகையிலும் நபி வழியாக இருக்காது. எனவே, மக்களை அவரவர் அந்தஸ்த்திற்கு ஏற்ப அணுகுவது தஃவாவின் முக்கிய பண்பாகக் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.
7. மறைவாக எடுத்துக் கூறல்:
புத்தி சொல்வது இப்போது யாருக்கும் பிடிப்பதில்லை. பெரியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் புத்தி கூறும் போது வேண்டா வெறுப்புடன் அதனை செவிமடுக்கின்றனர். சில போது பெற்ற பிள்ளைக்குக் கூட அடுத்தவர் முன்னிலையில் புத்தி சொன்னால் பிடிப்பதில்லை. எனவே, அடுத்தவர்களுக்கு நல்லது கூறும் போது கூட முடிந்தவரை இரகசியமாக, மறைவாகக் கூற முனைய வேண்டும். குற்றங்களைப் பகிரங்கப்படுத்தி அடுத்தவர்களின் மானத்துடன் விளையாடக் கூடாது. மானத்துடன் விளையாடுவது எவ்வளவு மனவலியைக் கொடுக்கிறது என்பதைப் பின்வரும் சம்பவத்தைப் படித்தால் புரியும்.
இப்னு உமர்(வ) அவர்கள் கூறுகின்றார்கள். ‘ஹஜ் அல்லது உம்றாவின் போது நான் உமர்(வ) அவர்களுடன் இருந்தேன். நாம் ஒரு பயணக் கூட்டத்தைக் கடந்த போது அதில் ஒருவர் எங்களைத் தேடுவதாகத் தான் கருதுவதாக உமர்(வ) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர் உமர்(வ) அவர்களிடம் வந்து அழுதார். அப்போது உமர்(வ) அவர்கள் உனது நிலை என்ன? நீ கடனாளியாக இருந்தால் உனக்கு உதவுகிறோம். நீ யாரையும் கொலை செய்திருந்தால் அதற்காக உம்மைக் கொல்வோம். அப்படி இல்லாமல் யாருக்காவது அஞ்சினால் உமக்கு நாம் பாதுகாப்பு அளிக்கின்றோம். உனக்குப் பக்கத்தில் இருப்பவர்களால் உனக்குப் பிரச்சினையென்றால் உன்னை வேறு இடத்திற்கு மாற்றுகின்றோம் என்று கூறினார்கள்.
வந்த மனிதர், நான் தய்யிம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். மது அருந்திவிட்டேன் அபூ மூஸா(வ) அவர்கள் எனக்குத் தண்டனை அளித்தார்கள். அத்துடன் எனது முகத்தில் கரியைப் பூசி மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். என்னுடன் யாரும் சேரக் கூடாதுÉ கூடி உண்ணக் கூடாது என்று கட்டளையிட்டார். இதனால் ஆத்திரமுற்ற நான் மூன்று முடிவுகள் எடுத்தேன்.
1. வாளை உருவி அபூமூஸாவைக் கொன்று விடுவது.
2. அல்லது என்னை நீங்கள் சிரியாவிற்கு இடம் மாற்ற வேண்டும். ஏனெனில், அவர்கள் என்னை அறியமாட்டார்கள்.
3. அல்லது நான் எதிரிகளுடன் இணைந்து அவர்களுடன் உண்டு, குடித்து வாழ்வது.
இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத்தான் நான் செய்ய வேண்டும் என்றார். இது கேட்டு அழுத உமர்(வ) அவர்கள் அபூ மூஸா(வ) அவர்களைக் கண்டித்தார்கள்.’ (பைஹகி)
ஒரு மனிதரது பாவத்தைப் பகிரங்கப் படுத்துவது சில போது அவனை அவன் ஏற்கனவே செய்ததை விட பெரிய தவறுகளைச் செய்யத் தூண்டிவிடும். எனவே, அடுத்தவர்களின் தப்புத் தவறுகளை மறைக்க வேண்டும். தனிப்பட்ட தவறுகளை தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டித் திருத்த முற்படுவதே சிறந்ததாகும். பொதுவாக உபதேசிப்பதாக இருந்தால் தவறு செய்தவரைச் சுட்டிக் காட்டாமல் தவறைக் கண்டிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
8. அன்பளிப்புக்கள் மூலம் அணுகுதல்:
நீங்கள் யாருக்கு தஃவா செய்ய விரும்புகின்றீர்களோ அவர்களுக்கு சின்னச் சின்ன அன்பளிப்புக்களை வழங்கலாம். அதனால் அவர்களுக்கு உங்கள் மீது பாசமும் சினேகமும் ஏற்படும். உங்களை அவர் மதிக்க ஆரம்பிப்பார். தான் நேசிப்பவரின், மதிப்பவரின் வார்த்தைகளை உள்ளம் வெகு விரைவாக உள்வாங்கிக் கொள்ளும். நபி(ச) அவர்கள் அன்பளிப்புக்களினூடாக அறப்பணி செய்துள்ளார்கள் என்பதை அவர்களது வழிகாட்டல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஸஅத்(வ) அவர்கள் அருகில் இருக்கும் போது நபி(ச) அவர்கள் சில மக்களுக்கு பொருளாதார உதவிகளைச் செய்தார்கள். ஆனால் ஒரு மனிதருக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. கொடுக்கப்பட்ட மக்களை விட கொடுக்கப்படாதவர் எனக்குச் சிறந்தவராக்கப்பட்டார். எனவே, யா யாஸுலுல்லாஹ்! ஏன் இந்த மனிதரை விட்டு விட்டீர்கள். நிச்சயமாக அவரை ஒரு முஃமினாக நான் கருதுகின்றேன் என்றார்கள். நபி(ச) அவர்கள் அதன்படி செயற்படாத போது மூன்று முறை இதையே திரும்பத் திரும்ப ஸஅத்(வ) கூறிய போது நபி(ச) அவர்கள்,
ஸஅதே! சில போது சில மனிதர்களுக்கு நான் பொருளாதார உதவிகளைச் செய்வேன். ஆனால் அவர்களை விட மற்றவர்கள் எனக்கு விருப்பமானவர்களாக இருப்பார்கள். ஏனெனில் நான் உதவி செய்யவில்லை என்பதால் தடம் புரண்டு அவர்கள் நரகத்தில் சென்று விழுந்து விடுவார்களோ என்ற அச்சமே காரணம் என்றார்கள்.’ (ஹதீஸ் கருத்து (புஹாரி, முஸ்லிம்))
எனவே, நபி(ச) அவர்கள் சிலரது பலவீனங்களை அவதானித்து அவர்களுக்கு அன்பளிப்புக்களை வழங்கியுள்ளார்கள். இந்த அடிப்படையில் அன்பளிப்புக்கள் மூலம் உள்ளங்களை வெற்றி கொள்ள அழைப்பாளர் கள் முயற்சிக்கவும்.
9. மக்கள் தொடர்பு வேண்டும்:
தங்களது பேச்சைக் கேட்காதவர்களின் பேச்சை மக்கள் கேட்கமாட்டார்கள். இந்த வகையில் நீங்கள் யாருக்கு தஃவா செய்கின்றீர்களோ அவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் உங்களுடன் கதைக்கும் போது கொஞ்சம் காது கொடுங்கள். அக்கறையுடன் கேளுங்கள். அவர்களது பிரச்சினை தொடர்பில் நீங்கள் அக்கறையாக இருப்பதாக அவர்கள் உணர வேண்டும். உங்களைப் பார்த்து மக்கள் பேசும் போது முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லாதீர்கள். அவர்கள் பேசும் போது அவர்களது பேச்சைத் துண்டிக்காதீர்கள். அவர்களது பேச்சு உங்களுக்குப் பொருத்தமற்றதாகத் தெரிந்தாலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். இருந்தாலும் அவர்களை எள்ளி நகையாடி விடாமல், ஏளனமாகப் பார்க்காமல் தட்டிக் கொடுங்கள்É ஆறுதல் கூறுங்கள். உங்கள் மீது அவர்களுக்குப் பிடிப்பு ஏற்படும். நபி(ச) அவர்களுடன் ஒருவர் உரையாடினால் பேச்சைத் துண்டிக்க மாட்டார்கள். முகத்தைத் திருப்பமாட்டார்கள். கையைக் கொடுத்தவர் கையைத் தானாக எடுக்கும் வரை தனது கையைப் பிடுங்கி எடுக்கமாட்டார் என்பதை எல்லாம் தாஈகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவை போன்ற அணுகுமுறைகளூடாக உள்ளங்களைக் கவர்ந்தால் உண்மையை எடுத்துச் சொல்வது மிக இலகுவாக அமைந்து விடும். அதை ஏற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் மக்கள் மனங்களும் மாறிவிடும்.
S.H.M இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர் - உண்மை உதயம் மாத இதழ்)

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்)

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்)

(ஒவ்வொரு தவ்ஹித்வாதியும் அறிந்திருக்க வேண்டிய வரலாறு)
மாபெரும் மார்க்க மேதையும் சீர்திருத்தவாதியுமான அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா என்பவர் ஹிஜ்ரி 661-ஆண்டு ரபீவுல் அவ்வல் 10(கி.பி 1263 ஜனவரி 22 ஆம் நாள்)சிரியாவில் ஹர்ரான் என்ற ஊரில் பிறந்தார். தந்தை ஷிஹாபுத்தீன் அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா திமிஷ்கிலுள்ள (டமாஸ்கஸ்) ஜாமி வுல் உமவீ மஸ்ஜித் இமாமாகவும், தாருல் ஹதீதுஸ்-ஸகரிய்யா பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். இவரின் பாட்டனார் அபுல் பரகாத் மஜ்துத்தீன அப்துஸ்ஸலாம் இப்னு தைமிய்யா (ஹி-652) ஹன்பலி மத்ஹபின் சிறந்த மார்க்க மேதையயாகவும் விளங்கினார். ஆறு ஆண்டுகள் பக்தாதில் கல்விச்சேவை புரிந்த இவர் எழுதிய ஹதீதுத்தொகுப்பாகிய அல்மந்திகிய்யு மின் அஹாதீதுல் அஹ்காம் என்ற நூலும், அல்-வஸிய்யத்துல் ஜாமிஆவும் இவரின்; புகழ் வாய்ந்த நூல்களாகும்
இளமை
இப்னு தைமிய்யா சிறு வயதிலேயே குர்ஆனை மனனமிட்டுவிட்டார்;. இமாம் ஸீபவைஹின் இலக்கண நூலில் தேர்ச்சி பெற்று இலக்கியம், அரபி வடிவெழுத்து, கணிதம் முதலானவற்றில் சிறந்து விளங்கினார். குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ் ஆகிய கலைகளை தமது தந்தையாரிடமிருந்து கற்றுத்தேறினார். சிறு வயதிலேயே அபார நினைவாற்றலைப் பெற்றிருப்பதை அறிந்த ஓர் அறிஞர் இவரது பலகையில் 13 நபிமொழிகளை எழுதி அதனை ஒரு தடவை படித்ததும் மனனமாகச்சொல்லுமாறு கேட்டார். அடுத்த கணமே ஒப்புவித்த இவரிடம் மீண்டும் ஒருமுறை அதே போல் வேறு சில நபிமொழிகளை எழுதிச் சோதித்தார். முன்புபொலவே இதிலும் சிறுவர் வெற்றியடைந்ததும் இச்சிறுவருக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பின் இவர் உலகில் ஒப்பாரும் மிக்காருமின்றி சிறந்த அறிஞராக விளங்குவார் என்று முன்னறிவுப்புச் செய்தார்.

நினைவாற்றல்
இவர் அறிந்த ஒன்றை ஒருபோதும் மறந்ததில்லை. இவர் 200க்கு மேற்பட்ட ஹதீஸ் கலை இமாம்களிடம் பாடம் பயின்றிருக்கிறார். இவருக்கு ஹதீதுக்கலையில் இருந்த அறிவாற்றலைக் கண்டு அறிஞர் இப்னுல் வர்தீ”குல்லு ஹதீதின் லா யஃரிபு ஹு இப்னு தைமிய்யா ஃபலைஸ பிஹதீஸின்” – “இப்னு தைமிய்யா அறியாத ஹதீஸ் ஹதீஸே அல்ல” என்று போற்றுகின்றார்.
திருக்குர்ஆன் பற்றி தாம் ஒரு நூறு விளக்கவுரைகள் படித்துள்ளதாகவும் ஏதேனும் ஒரு திருவசனத்திற்கு விளக்கம் தெரியவில்லையாயின் தாம் காடுகளுக்குச் சென்று தம் தலையை தரையில் வைத்து ஸுஜூது நிலையில் , இறைதூதர் இப்றாஹீம்(அலை)அவர்களுக்கு வழி காட்டிய இறவா!எனக்கும் இந்த திருவசனத்திற்கு தெளிவைத் தருவாயாக என்று இறைஞ்சி வந்ததாகவும் இவர் கூறுகின்றார்.

பிரச்சாரம்
கி.பி.1282ல் தமது 22-வது வயதில் இவரின் தந்தையார் இறந்ததும் அவர் வகித்த பேராசிரியர் பதவியில் நியமிக்கப்பட்டார். பதவி ஏற்றதும் இவர் ஆற்றிய முதற் சொற்பொழிவே மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. “அவ்வாண்டில் நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சி” என்று அதனை வரலாற்றாசிரியர் இப்னு கதீர் வர்ணிக்கிறார்.
அப்பதவியில் பதினேழு ஆண்டுகள் இருந்து பணி புரிந்தார். தமது வகுப்புகளிலும் மக்கள் மன்றங்களிலும் இஸ்லாத்தின் தூய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் துணிவுடன் எடுத்துரைத்தார். “பித்அத்”என்னும் அனாச்சாரங்களையும் இஸ்லாத்திற்-கெதிரான பொய்பிரச்சாரங்களையும் முறியடிப்பதில் முனைப்புடன் செயல்பட்டார். இவரிடம் இறைவனின் சில இயல்புகளையும் பண்புகளையும் பற்றிச் சிலர் கேள்வி கேட்க அவற்றிற்கு இவர் அளித்த ஆணித்தரமான பதில் ஷாபியாக்களையும், அஷ்அரியாக்களையும் கொந்தளித்துக் குமுறுமாறு செய்தது.

தீரச்செயல்
ஹி 699-ல் தார்த்தாரியர்கள் (சிரியா) திமிஷ்கின் மீது படையெடுத்து வந்தனர். அப்போது இவர் அவர்களை வாக்காலும் வாளாலும் எதிர்த்து நின்றார். மக்களை புறமுதுகிட்டு ஓடாது வீராவேசத்துடன் போர் புரியுமாறு தூண்டினார். உலமாக்கள், ஃபுகஹாக்கள் தலைமையில் மக்களை ஒன்று திரட்டி போர் பயிற்சி, அம்பெய்தும் பயிற்சி அளித்து போரிலே ஈடுபடுமாறு செய்து தாமும் கலந்து கொண்டார். இவரின் தீரச்செயல்களை வரவேற்று மக்கள் ஒத்துழைப்பு நல்கி பெரிதும் கௌரவித்தனர்.
துணிச்சல்
எகிப்து மன்னர் முஹம்மது காலாவூன் தார்த்தாரியர்களை எதிர்த்து நின்ற போதிலும் போரில் தோற்று வெருண்டோடினார். இக்காலை புதிதாக இஸ்லாத்தை ஏற்று மஹ்மூது என்னும் பெயர் சூடிய செங்கிஸ்கானின் பேரன் காஸானை சந்தித்து குர்ஆன் ஹதீஸ் போதனைகளை எடுத்தோதி முஸ்லிம்களின் உயிரை வீணேகொல்ல வேண்டாமென்று ஆணித்தரமாக வாதிட்டார். அப்போது இத்துணை பெரிய தைரியசாலியை இதுவரை நான் பார்த்ததில்லை என்று வியந்தார் காஸான். இவரை தம்முடன் உணவுண்ண காஸான் அழைத்தபோது அநியாயமாக கொள்ளையடிக்கப்பட்ட பொருளைத் தாம் உண்ணமுடியாது என இவர் மறுத்து விட்டார். அதன்பின் காஸான் தமக்காக பிரார்த்திக்குமாறு வேண்ட, இறைவா! காஸான் உன்னுடைய மார்க்கத்தை காப்பதற்காக வாளெடுத்திருப்பின் அவருக்கு உதவி செய்வாயாக. இல்லையேல் நீ விரும்பியவாறு செய்து கொள்! என்று பிரார்த்தித்தார். இதைக்கேட்டு அவருடன் சென்றவர்கள் நடுங்கிய பொழுது காஸான் அதற்கு ஆமீன் கூறிக்கொண்டிருந்தார். அதன்பின் தமது 300 பிரதானிகளை அழைத்து திமிஷ்கில் விட்டுவருமாறு மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.
சமயோசித ஆலோசனை
ஹி702 ரமளானில் மீண்டும் தார்த்தாரியர்கள் திமிஷ்கின் மீது படையெடுத்தபோது இவர் எகிப்து சுல்தான் இப்னு கலாவூனை படைதிரட்டி வருமாறும் அவருக்கு இம்முறை இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்குமென்றும் இறைவன் மீது ஆணையிட்டுக் கூறி, துன்புறுத்தப்பட்டவனுக்கு இறைவன் உதவுவான் என்னும் பொருளில் வரும் திருமறையின் 22:60 வசனத்தை ஓதிக்காட்டினார். ரமளான் பிறை 2ல் நடைபெற்ற இப்போரில் முஸ்லிம்களை நோன்பை விட்டுவிடுமாறு கூறி நோன்பு திறக்க இவர் உணவும் வழங்கினார். இந்த ஃபத்வாவுக்கு ஆதாரமாக நாளை நீங்கள் எதிரியை எதிர்த்து நிற்க வேண்டியதிருக்கும். அப்போது நீங்கள் நோன்பில்லாதிருந்தால்தான் எதிரியுடன் வன்மையாகப் போராட முடியும். என்று நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கிக் கூறியிருப்பதாக இவர் சொன்னார். இப்போரில் இவர் கூறிய வண்ணமே எகிப்து சுல்தான் வெற்றி பெற்றார். தார்த்தாரியர் புறமுதுகிட்டு ஓடினர்.

சீர்திருத்தங்கள்
யூத கிறித்தவ சகவாசத்தால் முஸ்லிம்களிடையே ஊடுருவியிருந்த பழக்கவழக்கங்கள், அனாச்சாரங்கள், பித்அத்துகளை களைவதில் முழு மூச்சாக ஈடுபட்டார். திமிஷ்கின் அருகில் குலூத் நதி தீரத்தில் உள்ள ஒரு கற்பாறைக்கு மக்கள் தெய்வீகத் தன்மை கற்பித்து அங்கு இறையருள் வேண்டி சென்று வருவதைக்கண்ட இவர் கல்வெட்டும் தொழிலாளர் சிலரை அங்கு அழைத்துச் சென்று அதனை வெட்டி துவம்சமாக்கி அப்பழக்கத்திற்கு சாவுமணிகட்டினார்.
ஒருவர் நகங்களையும் தலை மயிரையும் நீளமாக வளர்த்து பறவைகளின் இறக்கைகளால் உடை அணிந்து கொண்டும், குடித்துக் கும்மாளமடித்துக் கொண்டும் ஆபாசச் சொற்களை வீசிக்கொண்டும் ஹிப்பியைப் போல் திரிவதைக் கண்ட இவர், அவனை அழைத்து பக்குவமாக உபதேசம் செய்து அவனை முழுமையாக மாற்றி புதுமனிதராக்கினார்.
மற்றொருவர் கனவுக்கு விளக்கம் கூறுவதில் வல்லவர் எனக்கூறி ஏய்த்துப் பிழைத்து வருவதைக் கண்டு அவ்வழக்கத்தை விட்டொழிக்குமாறு ஆணையிட்டார் இவர்.
மார்க்கத்திற்கு எதிரான பாத்தினீ, நுளைரீ, இஸ்மாயிலீ முதலான சில வகுப்பார் குன்றுகளிலும் காடுகளிலும் வாழ்ந்து இஸ்லாத்தின் விரோதிகளுக்கு உதவிவருவதைக் கண்டு மனம் கொதித்து சுல்தானின் படையுடன் அவர்கள் மீது போர்மேற்கொண்டார். காடுகளில் போய் அவர்கள் பதுங்கிக் கொள்வதை அறிந்த இவர் காடுகளிலிருந்த மரங்களை வெட்டி வீழ்த்துமாறு கூறி பனூ நதீர்கள் மீது நபி (ஸல்)அவர்கள் படையெடுத்துச் சென்றபோது இவ்வாறு செய்துள்ளார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

சத்திய முழக்கம்
இவ்வாறு எங்கெல்லாம் ஆகாப் பழக்கங்களைக் கண்டாரோ அங்கெல்லாம் துணிச்சலோடு சென்று அவற்றை அகற்றினார் இவர். இதனால் இவருக்குப் பல எதிரிகள் ஏற்படலாயினர். குர்ஆன் ஹதீஸின் படி முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டுமென்று இவர் முழங்கி வந்தது இவருக்குப் பல ஆதரவாளர்களைத் தேடித்தந்த போதினும் அதைவிட அதிகமாக எதிரிகளையும் உண்டு பண்ணியது. எனினும் தமது சத்தியப்போதனைகளிலிருந்து ஒருபொதும் இவர் பின்வாங்கவே இல்லை. இப்னு அரபியின் வஹ்தத்துல் உஜூது கொள்கையை இவர் வன்மையாக தாக்கிய பொழுது இவரை எகிப்துக்கு வருமாறு சுல்தானிடமிருந்து கண்டிப்பான கட்டளை வந்தது. மர்க்கவிற்பன்னர்கள், அரசாங்க அதிகாரிகள் நிரம்பிய அம்மன்றத்தில் இவரது நியாயமான வாதத்தை யாரும் கேட்கத்தயாராக இல்லை. இவரையும் இவரது சகோதரர்களான ஷர்புத்தீன் அப்துல்லாஹ்வும், ஸைனுத்தீன் அப்துர்ரஹ்மானும் சிறையில் தள்ளப்பட்டனர்.
சிறையிலும் கொள்கைப்பிரச்சாரம்
சிறையிலும் இவர் தம் கொள்கைப் பிரச்சாரத்தை விடவில்லை. இவர் சென்ற சில நாட்களில் சிறைக் கூடம் முழுவதும் பிரச்சார மடமாக காட்சிவழங்கியது. இவரின் மாணவர்களாக மாறிய கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுதுகூட விடுதலை வேண்டாமென்று கூறிச்சிறையிலேயே இவருடன் இருந்து கொண்டார்கள். இவர் தம்முடைய பிரச்சாரத்தை விட்டுவிடுவதாகக்கூறின் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. ஷஷமுடியாதுஷஷ அதற்குப்பதிலாக இச்சிறையே எளக்குப் போதுமானது என்று கூறிவிட்டார் இவர்.
சூபித்துவ-தரீக்காக் கொள்கைகளை உடைத்தெறிந்தார்
ஹிஜ்ரி 707 ரபீவுல் அவ்வல் 23ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட இவர் கெய்ரோவிலுள்ள மத்ரஸா ஸாலிஹிய்யாவிலும் ஏனைய கல்விக்கூடங்களிலும் சொற்பொழிவாற்றினார். பிற்காலத்தில் தோன்றிய சூபித்தத்துவம் இந்தோ-கிரேக்க தத்துவமேயாகும் என்றும் அது ஷரீஅத்துக்கு அப்பாற்பட்டது என்றும் இவர் கூறினார். சூபிகளெல்லாம் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்க, ஷெய்கு இப்னு அதாவுல்லாஹ் இஸ்கந்தரி என்னும் சூபி வழக்குத்தொடர இவர் ஷவ்வால் மாதம் 8ஆம் நாள் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்;. இதன் பின் விடுதலை செய்யப்பட்ட இவர், அங்கு நிலவி வந்த ஸப்யீனிய்யா தரீக்காவை உடைத்தெறிந்து அதில் சேர்ந்திருந்த பலரைத்தம் கொள்கையை ஏற்குமாறு செய்தார்.

எதிரிகளுக்கும் மன்னிப்பு
ஹிஜ்ரி 709ல் நாஸிர் இப்னு கலாவூன் அரியணை ஏறியதும் இவரை கெய்ரோ வரவழைத்து மிகவும் மரியாதையுடன் வரவேற்றார். இவரது எதிரிகளுக்கெல்லாம் தலைவெட்டும் தண்டனை விதிப்பதாக சுல்தான் கூறிய போது அவர்களையெல்லாம் எப்போதே மன்னித்துவிட்டேன் என்று கூறினார். இதன் பிறகு இவருடைய விரோதிகள் இவரது பிச்சார வேகத்தைத் தடைசெய்ய முடியாது போகவே இவரை அடித்து உதைத்து உடலில் பலத்த காயத்தை ஏற்படுத்தியனார்கள். அப்போது பழிவாங்க எண்ணிய தமது ஆதரவாளர்களிடம் அவர்களை ஒன்றும் செய்யவேண்டாம் எனத்தடுத்துவிட்டார். இவ்விதம் தனக்குத் துன்பங்கள் விளைவித்த எதிரிகள் அத்தனைபேரையும் மன்னித்த நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு.
போர்படையில் பங்கேற்பு
ஹிஜ்ரி 712ல் தார்த்தாரியர்கள் திமஷ்கின்மீது படையெடுத்து வந்தபோது சுல்தானுடன் படையில் சேர்ந்து இஸ்லாத்திற்காக வீரப்போர் செய்து உயிர் நீக்க வீரும்புவதாகக் கூறி போரிடச்சென்றார்.
பிரச்சாரத்தில் முழுக்கவனம்
மார்க்க விசயங்களில் கவனம் செலுத்திய இவர் மூன்று தலாக் விசயத்தில் – ஒரே நேரத்தில் கூறும் மூன்று தலாக் செல்லுபடியாகாது என்று – கூறிய கருத்து மார்க்க அறிஞர்களின் எதிர்ப்பை மீண்டும் ஈட்டித்தந்தது. இதனால் சிறையில் தள்ளப்பட்டு ஐந்து மாதங்களும் பதினெட்டு நாட்களும் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் ஹிஜ்ரி 721 முஹர்ரம் 10ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார்.

கப்று வணக்கத்திற்கு எதிராகக் குரல்
ஹிஜ்ரி 726 வரை மத்ரஸா ஹன்பலிய்யாவிலும், கஸ்ஸாஸீனிலுருந்த தமது சொந்த பாடசாலையிலும் குர்ஆன், ஹதீஸ் வகுப்புகள் நடத்தி வந்தார்கள். இந்தவேளையில் பதினேழு ஆண்டுகளுக்கு முன் பெரியார்களின் கப்ருகளுக்கும், நபி(ஸல்) அவர்களுடைய கப்குக்கும் தரிசிப்பதையே நோக்கமாகக் கொண்டு செல்லக்கூடாது என இவர்கள் வழங்கிய ஒரு ஃபத்வாவை வைத்து எதிர்பாளர்கள் பெரும் கிளர்ச்சி செய்யவே மீண்டும் ஹி.726 ஷஃபான் 7ஆம் நாள் இவர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதை அறிந்ததும் நான் எதிபார்த்தது நடந்து விட்டது. மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதனால் எனக்கு மிகுந்தநன்மையே ஏற்படும் என்று புன்முறுவலோடு கூறினார்.
சிறையிலிருந்தே நாடுமுழுவதும் எழுத்துப்பிச்சாரம்
திமிஷ்கில் இவர் சிறையில் தள்ளப்பட்டபோது இவரது சகோதரர் அப்துர்ரஹமான் இப்னு தைமிய்யாவும் மாணவர் ஹாபிள் இப்னு கைய்யூமும் உடனிருந்தனர். சிறையில் வைத்து இவர் எழுதியவை யாவும் பிரதி செய்யப்பட்டு நாடு முழவதும் பரத்தப்பட்டன. இதையறிந்த அரசாங்கம் அவையாவையும் பறிமுதல் செய்தது. இவரிடம் இருந்த கையெழுத்துப் பிரதிகளும் இவர் எழுதப்பயன்படுத்திய காகிதம், எழுதுகோல் மைக்கூடு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டன. ஆனால் இவரோ அதுபற்றிச் சிறிதும் கவலைப்படாது தமக்குக் கிடைத்த காகிதங்களில் தமது கருத்துகளை கரிதுண்டால் எழுதி வந்தார். இப்போராட்டத்தை இவர் ஒரு ஜிஹாத் என்றே கருதினார்.

சீர்திருத்தச் செம்மலின் மறைவு
சிறையிலிருக்கும் போது திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியதோடு எண்பது தடவை ஓதி முடித்தார். எண்பத்தொன்றாவது தடவை ஸூரத்துல் கமர் ஓதத்துவங்கி 54:54,55 வசனமாகிய இன்னல் முத்தகீன ஃபீஜன்னத்தின் வநஹர் ஃபீ மக்அதி ஸித்கின் இந்த மலீகின் முக்ததிர் நிச்சயமாக பயபக்தியுடையோர் சுவனபதிகளிலும் (அவற்றிலுள்ள) ஆறுகளிலும் இருப்பார்கள். மெய்யாகவே மிகவும் கண்ணியமிக்க இருப்பிடத்தில் ஆற்றல்மிக்க அரசனிடத்தில் (இருப்பார்கள்). என்ற வசனத்தை ஓதிவரும்பொழுது இவருடைய ஆவி உடலைவிட்டும் பிரிந்தது. இது நிகழ்ந்தது ஹிஜ்ரி 728 துல் கஃதா பிறை 2 இரவாகும். அப்போது இவருக்கு வயது 67. இவருடைய ஜனாஸா தொழுகையில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இவருடைய ஜனாஸா தொழுகை பல்வேறு நாடுகளிலும், நெடுந்தொலைவிலுள்ள எமனிலும், சீனாவிலும்கூட நிகழ்த்தப்பட்டது.
புரட்சிகரமான நூல்கள்
இவர்கள் 500 நூல்கள் வரை எழுதியுள்ளார்கள். அவற்றுள் மஜ்மூஉல் பதாவா, (மஜ்மூஅத்துல் ஃபதாவா இப்னு தைமிய்யா 20 பாகங்களில் இன்றும் கிடைக்கின்றன) அல் வாஸிதிய்யா, தர்உ தஆருளில் அக்லி வந்நக்லி, நக்ளுல் மந்திக், மின்ஹாஜுஸ் சுன்னத்திந் நபவிய்யா. தப்ஸீர் இப்னு தைமிய்யா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவர்களின் மாணவர்கள்
இவர்களின் புகழ் வாய்ந்த மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் :
1. இமாம் ஹாபிள் இப்னு கையிமில் ஜவ்ஸிய்யா (ரஹ்)
2. இமாம் ஹாபிள் அல்-முஃபஸ்ஸிர் இப்னு கதீர் (ரஹ்)
3. இமாம் ஹாபிள் அல் முஹத்திஸ் ஷம்ஸுத்தீன் அத்தஹபீ (ரஹ்)
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபும் எகிப்தில் தோன்றிய அல்மனார் சீர்திருத்த வாதிகளும் இவரைப் பின்பற்றியவர்களேயாவார்கள்.
(குறிப்பு: இவர்களின் சத்திய முழக்க வரலாறு பிரச்சாரகர்களுக்கு சிறந்த பாடமாகும் இத்துணை மாண்புக்குரிய பெருமேதையைத் தூற்றுவோரும் வரலாற்றில் உண்டு. இவர்களைப்பற்றிய பாடநூலோ அறிமுகமோ இந்திய மத்ராஸாக்கள் எதிலும் இல்லாதது வியப்புகக்கும் வேதனைக்குமுரியதாகும்.)

Dr. Ahmad Baqavi Ph.D.